‘என்95’க்கு மாற்றாக ‘எஸ்எச்ஜி95’ மலிவு விலை முகக்கவசம்

புதுடில்லி, ஜூன் 11- மறு உபயோகத்துக்குப் பயன்படாத ‘என்-95’ முகக்கவசங்களுக்கு மாற்றாக, வைரஸ், நுண் கிருமிகளிடம் இருந்து 99 சதவீதம் வரை பாதுகாக்கும் வீரியமிக்க மலிவு விலை முகக்கவசங்களை உருவாக்கி உள்ளதாக, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றிலிருந்து மனிதர்களைப் பாதுகாப்பதில் கிருமி நாசினிகளையும் முகக்கவசங்களையும் முக்கியப் பங்கு வகிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மருத்துவர்களும் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களும் ‘என்-95’ ரக முகக் கவசங்களை பயன்படுத்தி வந்தனர். இது மிகுந்த பாதுகாப்பாகக் கருதப்பட்டது. ஆனால் இதன் விலை மற்றும் மறு உபயோகமின்மை போன்ற அசவுகரியங்கள் இருந்தன.
இவற்றைப் போக்கும் விதமாக, கோவிட்-19 நிதித் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சில் (பிஐஆர்ஏசி), ஐகேபி நாலேஜ் பார்க் போன்ற அமைப்புகள், ஐதராபாத்தில் உள்ள பரிசோதா டெக்னாலஜிஸ் என்கிற தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கின. இதன்மூலம் ‘எஸ்எச்ஜி95’ என்கிற வீரியமிக்க பல அடுக்கு முகக் கவசம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது-
இந்தியாவிலே தயாரிப்போம்’ திட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்த முகக்கவசங்கள் 90 சதவீதம் மாசு துகள்களிலிருந்தும், 99 சதவீத தீநுண்மி, நுண்ணிய கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எளிதாக காற்றை சுவாசிக்கும் வகையிலும் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பருத்தித் துணியால் தயாரிக்கப்படும் இந்த முகக் கவசங்கள் பல அடுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த முகக்கவசங்களுக்கு ரூ.50 முதல் 75 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இந்த ஹைதராபாத் நிறுவனத்தில் முதலீடு செய்து 1,45,000 முகக்கவசங்களை பெற்றுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.