சென்னை: ஆகஸ்ட் 10-
எம்ஜிஆர் கருணாநிதிக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்தார் எனவும், திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்வதற்கு காரணமாக இருந்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எம்ஜிஆர் ஜெயலலிதாவை விமர்சித்துள்ள திருமாவளவனை கடுமையாக கண்டிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான திருமாவளவன், திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவு செய்து, ஒரு பார்ப்பன பெண்மணி திராவிட கட்சியின் தலைவராக அமைய எம்ஜிஆர் பாதை போட்டுக் கொடுத்தார் என பேசி இருந்தார்.
திருமாவளவனின் இந்த பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எம்ஜிஆர் ஜெயலலிதாவை விமர்சித்த திருமாவளவனை கடுமையாக கண்டிப்பதாக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவுக்கு ஓபிஎஸ் “வறியவர்களுக்கு வழங்கிய வள்ளல்களின் புகழைப் பற்றித்தான் உலகம் எப்போதும் சிறப்பாகப் பேசும்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணாக திரு. தொல் திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பது அவருக்கு நல்லதல்ல.
அது அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது. எனவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் குறித்த விமர்சனத்தை
திரு. தொல் திருமாவளவன் அவர்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.















