எம்பி பிரஜ்வல் வீடியோ தொடர்பாக‌ எஸ்ஐடி விசாரணை

பெங்களூரு, மே 28:
பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 31-ம் தேதி எஸ்ஐடி முன்பு ஆஜராகப் போவதாக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா கூறிய வீடியோ எந்த நாட்டில் இருந்து வந்தது என்று சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது.
மாநில மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்காக இந்தியா வரப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ எங்கிருந்து, எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது குறித்து எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரஜ்வல் ரேவண்ணா சென்ற முறையும் வரப் போவதாக கூறி ஒரு வாரம் அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் ஒருவாரம் ஆகியும் அவர் திரும்பாமல், காணாமல் போனார். எனவே தற்போது பிரஜ்வல் ரேவண்ணாவை தொடர்பு கொள்ள எஸ்ஐடி முயற்சித்து வருகிறது.
பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்புவதால், மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டில் இருந்து நேரடியாக பெங்களூரு வருவாரா அல்லது வேறு ஏதேனும் விமான நிலையத்திற்கு வருவாரா என எஸ்ஐடி யோசித்து உஷார் நிலையில் உள்ளது. எந்த இடத்தில் வந்து இறங்கினாலும், அவரைக் கைது செய்து, காவலில் எடுக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
வேறு விமான நிலையத்திற்கு வந்தால் அவரை உடனடியாக கைது செய்வது குறித்து எஸ்ஐடி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக எஸ்ஐடி அதிகாரிகள் கூட்டம் நேற்று நடந்தது. பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பிய பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.