திருவனந்தபுரம்: ஜூலை 24 உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாலை மார்க்கமாக மட்டுமே பக்தர்கள் சென்று வரும் நிலையில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கிறது. சுமார் 7000 கோடி மதிப்பீட்டில் விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் நிலையில் இதற்கான அனுமதி கேட்டு கேரளா அரசு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் இருக்கிறது. அங்கு குடிகொண்டிருக்கும் தர்மசாஸ்தா ஐயப்பனை காண தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வருடம் தோறும் பக்தர்கள் சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொள்கின்றனர். தற்போது பம்பை, எரிமேலி வழியாக சபரிமலைக்கு செல்லலாம்.
கேரளாவுக்கு சென்றதும் அங்கிருந்து சாலை மார்க்கமாக வனப் பகுதிகளுக்கு நடுவே சாலை வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு சபரிமலையில் கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருக்கிறது.
















