எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு

புதுடெல்லி:மார்ச் 8: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சிறப்புச் சலுகையாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, “இன்று மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பல லட்சம் குடும்பங்களின் நிதிச் சுமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கும். குறிப்பாக பெண் சக்திக்கு வலிமை தரும்.
சமையல் எரிவாயு சிலிண்டரை மேலும் எளிதாக வாங்கும் நிலையை உருவாக்குவதன் மூலம் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் உருவாக்கலாம். பெண்களுக்கு வலிமை சேர்ப்போம் என்ற எங்களின் வாக்குறுதிக்கு இணங்கவும், அவர்களின் வாழ்தலை எளிதாக்குவதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் இதுவரை ரூ.918-க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் இனி ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.818-க்கு விற்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் கூறிய, தனது டிவிட்டர் பதிவில் எங்கள் நாரி சக்தியின் வலிமை, தைரியத்தை நாங்கள் வணங்குகிறோம், பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறோம்.
மேலும் கல்வி, தொழில்முனைவு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் பலவற்றில் முன்முயற்சிகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்க எங்கள் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நாம் செய்த சாதனைகளிலும் இது பிரதிபலிக்கிறது.
கல்வி, தொழில்முனைவு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் பலவற்றின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டருக்கு 300 ரூபாய். மானியம் தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மானிய காலம் முடிவடைந்ததை அடுத்து மத்திய அரசு இந்த முடிவை அறிவித்தது. இதற்கிடையில் கோடிக்கணக்கான
குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மக்கள் நலன் சார்ந்த முடிவை எடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் பெருமைக்குரிய மத்திய அரசை நாம் பெற்றுள்ளோம் என்றார்.