எருமேலி பேட்டை துள்ளல் நிறைவு; இன்று திருவாபரணம் புறப்பாடு

சபரிமலை, ஜன. 12- மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நேற்று நடந்தது. இன்று (ஜன.,12) திருவாபரணம் பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 14ல் மகரஜோதி பெருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளுக்காக அனைத்துத்துறை அதிகாரிகளும் சபரிமலை, பம்பை, ஜோதி தெரியும் இடங்களில் முகாமிட்டுள்ளனர்.சபரிமலை, பம்பையில் 2,000 போலீசாரும், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களில் தேவைக்கேற்ப போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் எருமேலியில் பேட்டைத்துள்ளல் நடந்தாலும் மகரவிளக்குக்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத்துள்ளல் மிகவும் பிரசித்தி பெற்றது. நேற்று மதியம் 12:00 மணிக்கு ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை கண்டதும் பேட்டை ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் இருந்து அம்பலப்புழா பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன் பேட்டைத்துள்ளி வந்தனர்.
நெற்றிப் பட்டம் கட்டிய யானையுடன் பேட்டை துள்ளிய பக்தர்கள் வாவர் பள்ளி வாசலை வலம் வந்து பெரிய சாஸ்தா கோவிலில் நிறைவு செய்த பின்னர் பெருவழிப்பாதை வழியாக சபரிமலை புறப்பட்டனர். இதுபோல ஆலங்காடு பக்தர்கள் மதியம் 3:00 மணிக்கு வானில் பிரகாசித்த நட்சத்திரத்தை கண்டதும் பேட்டை துள்ளினர். இதில் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்த இரண்டு குழுவினரின் பேட்டைத்துள்ளலுடன் பேட்டைதுள்ளல் நிறைவு பெற்றது.
மகரவிளக்கு நாளில் அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் இன்று பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து புறப்படுகிறது.அதிகாலை 5:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும் இந்த திருவாபரணங்கள் மதியம் 12:00 மணிக்கு உச்சபூஜைக்கு பின் பெட்டகங்களில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது.
இந்த திருவாபரண பவனி ஜன., 14- மாலையில் சன்னிதானம் வந்தடையும். மகரவிளக்குக்கு முன்பாக பிரசாத சுத்தி பூஜைகள் இன்று தீபாராதனைக்கு பின்னர் நடக்கிறது.நாளை அதிகாலை கணபதி ஹோமத்துக்கு பின்னர் கோயிலுக்கு வெளியேயும், 7:30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் கோயிலுக்கு உள்ளேயும் பிம்பசுத்தி பூஜைகள் நடக்கிறது.
மகரவிளக்கு நாளில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று மகர சங்கரபூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தமான மதியம் 2:29 மணிக்கு இப்பூஜை நடக்கிறது.இந்த நேரத்தில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு நேரடியாக அய்யப்பனுக்கு அபிேஷகம் செய்யப்படும். மதியம் 2:45 மணிக்கு நடை அடைக்கப்படும்.மாலை 5:00 மணிக்கு நடைதிறந்து 6:30 மணிக்கு திருவாபரணம் அணிவித்து தீபாராதனையும், தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடக்கிறது.