பெங்களூரு, ஆக. 23- பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் விபத்தை ஏற்படுத்தும் மோசமான சாலைகள் உள்ளதால் நிகழாண்டின் 6 மாதங்களில் 109 விபத்துக்கள் ஏற்பட்டு, தெற்கு மண்டலத்தில் இப்பகுதி மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது ஒரு சாலை விபத்து ஏற்படும். எனவே இப்பகுதி விபத்து மையமாக மாறி வருகிறது. சமீபத்திய போக்குவரத்து போலீஸ் தரவுகளின்படி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் நிகழாண்டில் 6 மாதங்களில் 109 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இப்பகுதியில் மாதந்தோறும் சராசரியாக 18 விபத்துகள் நடக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, 2023 ஆம் ஆண்டில் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் சாலை விபத்துக்களில் 21 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டை விட உயிரிழப்புகளின் விகிதம் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், இப்பகுதியில் 12 மாதங்களில் 26 மரண விபத்துகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு வெறும் 6 மாதங்களில், இப்பகுதி 20 பேரின் இறப்புக்கான விபத்துக்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு சாலை விபத்துக்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், போக்குவரத்து தெற்கு மண்டலத்தில் மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாக இப்பகுதி உள்ளது என்றும் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதுபோன்ற மற்றொரு சம்பவத்தில், திங்கள்கிழமை இரவு, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் சரக்கு வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக எலக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.போலிசாரின் கூற்றுப்படி, இரவு 11.30 மணியளவில் மேம்பாலத்தின் கீழ் இழுத்துச் செல்லப்பட்டபோது கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சரக்கு வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கிய காயம் அடைந்தவர்களை மீட்க போலீசார் கடுமையாக போராடினர்.
சரக்கு வாகன ஓட்டுநர் ஹரிஷ் மற்றும் லாரி டிரைவர் மன்சூர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் வாகனங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு வாகனங்களையும் போலீசார் அப்புறப்படுத்திய பிறகே போக்குவரத்து சீரானது. எலக்ட்ரானிக் சிட்டியில் அதிக எண்ணிக்கையிலான விபத்துகளுக்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், மோசமான சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டுவதுதான் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
சில குறிப்பிட்ட இடங்களில் அதிகமாக விபத்துகள் நடக்கின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர். எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் சிறிய மற்றும் பெரிய சாலை விபத்துகள் தொடர்ந்து நடக்கும் குறிப்பிட்ட பகுதிகள் உள்ளன. பைக்குகள் கார்கள் மீது மோதுவதும், பைக் ஓட்டுபவர் நெடுஞ்சாலையில் கீழே விழும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடப்பதால், அப்பகுதிகளில் பைக்குகளை அனுமதிக்கக் கூடாது. மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்கள் மற்றும் நைஸ் சாலையுடன் இணைக்கும் சாலை ஆகியவை அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்கிழமை காலை வரை 14 விபத்துகள் நடந்துள்ளன. இதில், பைக், கார், கேன்டர், ஆட்டோ என பல்வேறு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த சாலை விபத்துகளில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த மற்றும் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.