‘எலி வளை’ தொழிலாளர்கள் அதிருப்தி

புதுடெல்லி: டிசம்பர் 25 உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணிக்காக வழங்கப்பட்ட ஊதியம் போதாது என்று ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் கடந்த நவம்பர் 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க மண் சரிவின் பக்கவாட்டில் அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் மூலம் துளையிடப்பட்டது. ஆனால், அந்த இயந்திரம் உடைந்தது. மீதமுள்ள 13 மீட்டர் தொலைவை துளையிட டெல்லியில் இருந்து 12 ‘எலி வளை’ தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். உயிரை பணயம் வைத்து அவர்கள் சுரங்கப்பாதையை துளையிட்டு குழாய்களை பொருத்தினர். அவர்கள் அமைத்த குழாய் பாதை வழியாக கடந்த நவம்பர் 28-ம் தேதி 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.உத்தராகண்ட் அரசு சார்பில் 12 ‘எலி வளை’ தொழிலாளர்களுக்கும் தலா ரூ.50,000-க்கான காசோலை வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஒட்டுமொத்த இந்தியர்களும் சுரங்க தொழிலாளர்களை மீட்க பிரார்த்தனை செய்தனர். மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பல நாட்கள் போராடி பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை. இக்கட்டான சூழலில் உயிரை பணயம் வைத்து நாங்கள் சுரங்கத்தை தோண்டி 41 தொழிலாளர்களை மீட்க வழி செய்தோம். மீட்புப் பணியில் ஈடுபட்ட 90 பேரின் பட்டியலை உத்தராகண்ட் அரசு வெளியிட்டது.