எல்லையில் ஊடுருவிய மர்ம பறக்கும் பொருள் மீது துப்பாக்கி சூடு

ஜம்மு, ஆகஸ்ட். 2 –
ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ராணுவ வீரர்களுடன் இணைந்து, பயங்கரவாத ஊடுருவல், ஆயுத கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு பணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், காஷ்மீரின் கனாசக் பகுதியில் சர்வதேச எல்லையில் அடையாளம் தெரியாத மர்ம பறக்கும் பொருள் ஒன்று நேற்றிரவு மின்னும் ஒளியுடன் கடந்து செல்ல முயற்சித்து உள்ளது. இதனை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர் அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். எனினும், அதன்பின்னர் அந்த பொருளை படையினர் கண்டறிய முடியவில்லை.
அது எந்த பகுதியில் விழுந்திருக்கும் என்று தேடும் பணியில் படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனை எல்லை பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.