எல்லையில் கண்காணிப்பு

சென்னை, செப்.13- கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு உயிர்க்கொல்லி நோயான நிபா வைரஸ் பாதித்து 17 பேர் வரை உயிரிழந்தனர். அப்போது இது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 49 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி உயிரிழந்தார். இதேபோல கடந்த 10-ந்தேதி அதே ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் உயிரிழந்தார்.மேலும் இரண்டாவதாக இறந்த நபரின் மனைவி, 9 வயது, 4 வயது முறையேயான 2 மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என 4 பேரும் காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 2 சிறுவர்களுக்கு தனிவார்டில் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம், மாநில சுகாதாரத்துறைக்கு தகவல் அளித்தது.
இதைத்தொடர்ந்து 2-வதாக இறந்த நபருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தனிவார்ட்டில் சிகிச்சை அமைக்கப்பட்டு வருகிறது. இவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 75 பேரில், இறந்தவர்களுடன் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களும் அடங்குவர். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி, கோவை உள்பட தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் இருந்து வருவோர் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் தமிழ்நாடு எல்லைக்குள் வருவோரிடம் உடல்நல பரிசோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.