எல்லையில் பறக்கும் படை தொடர் கண்காணிப்பு

ஈரோடு:ஏப். 22: மக்களவைத் தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படை வீதம், மொத்தம் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இதுதவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை இயங்கியது. மேலும், வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் குழு எனமாவட்டம் முழுவதும் 144 குழுக்கள்பணியில் ஈடுபட்டன.
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, கோபி, பவானி, பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.
அதேசமயம், பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளன. கர்நாடகாவில் ஏப்.26 மற்றும் மே 7-ம் தேதி என 2 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது.
இதனால், தமிழக – கர்நாடக மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர்தொகுதியில் 3 பறக்கும் படையினர், எல்லை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபடுவர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.