ஏஐ அறிமுகம் – 100 ஊழியர்களை நீக்கிய பேடிஎம் நிறுவனம்

புதுடெல்லி: ,டிச.26 பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன், செலவு குறைப்பு நடவடிக்கையாக 100 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிறுவனத்தைப் பொருத்தவரையில் செயல்பாட்டில் ஆட்டோமேஷனைக் கொண்டு வருவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு பிரிவுகளில் ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது எதிர்பார்த்ததைக்காட்டிலும் அதிக பலனை கொடுத்துள்ளது. இதையடுத்து, செலவு குறைப்பு நடவடிக்கையாக விற்பனை, பொறியியல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலிருந்தும் மொத்தம் 100 பணியாளர்களை நீக்க முடிவு செய்யப்பட்டது.
ஏஐ தொழில்நுட்பமானது எங்களின் பணியாளர்களின் செலவினத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்க உதவியுள்ளது. ஃபின்டெக் நிறுவனங்களில் தொடர் நிகழ்வு பணிகளில் ஏஐ தொழில்நுட்பம் எதிர்பார்ப்புக்கும் அதிகமான பலனை வழங்கி வருகிறது. எனவே, செயல்திறனற்ற தேவைக்கும் அதிகமாக இருக்கும் பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இருப்பினும், எங்களது முக்கிய ஆதரமாக இருக்கும் பேடிஎம் நிறுவனத்தில் வரும் ஆண்டில் மேலும் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான புதுமையான தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் பணப்பட்டுவாடா தளத்தை விரிவாக்கம் செய்ததுடன், அதனை வலிமையான வகையில் கட்டமைத்துள்ளோம். எனவே வரும் காலங்களில் புதிய வணிகங்களின் விரிவாக்க நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இவ்வாறு பேடிஎம் தெரிவித்துள்ளது.