ஏசி செயல்படாததால் விமான பயணிகள் மயக்கம்

புதுடெல்லி, ஜூன் 1- டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு செல்ல வேண்டிய விமானம் புறப்பட தாமதமானது. அதில் ஏசி செயல்படாததால் பயணிகளுக்கு மயக்கம் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர். டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு நேற்று முன்தினம் 3.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்படுவதாக இருந்தது. இதில் பயணம் செய்ய 200 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேறு ஒரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் விமானம் புறப்படுவது தாமதமானது. அதன் பிறகு இரவு 8 மணிக்கு விமானம் புறப்படும் என தெரிவிக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரம் முன்பு பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்துள்ளனர். அப்போது விமானத்தில் ஏசி செயல்படவில்லை. இதனால், பயணிகள் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அவதிக்குள்ளான பயணிகள், விமான பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்னை காரணமாக பயணிகள் மீண்டும் விமான நிலையத்துக்கே திருப்பி அழைத்து செல்லப்பட்டனர். அப்போது ஏரோபிரிட்ஜில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு புறப்படும் என விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார். பின்னர் விமானம் புறப்படும் நேரம் 3 மணிக்கு புறப்படும் என தெரிவித்தது. அமெரிக்காவுக்கு செல்லவிருந்த விமானம் புறப்படும் நேரம் பல முறை மாற்றப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் கடந்த 24ம் தேதி மும்பையில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்ல வேண்டிய விமானம் அடுத்த நாள் காலையில் புறப்பட்டு சென்றது.