ஏப்ரல் 2024 உலகின் அதிக வெப்பமான மாதம்

பாரிஸ்: மே 8: சர்வதேச கடல் மற்றும் புவி மேற்பரப்பு வெப்ப சராசரி ஏப்ரல் 2024-ல் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் உலகில் அதிக வெப்பம் பதிவான மாதமாக இந்த ஏப்ரல் மாதமாக இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்நினோ தாக்கம் படிப்படையாக வலுவிழந்து வரும் சூழலில் அதன் இறுதிக்கட்ட தாக்கத்தால் வெப்பம் கடுமையாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதீத வறட்சி, பருவம் தவறிய மழை, வெள்ளம், சூறாவளிக்கள் போன்றவை இந்தத் தாக்கத்தால் நீடிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
எல் நினோ என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. பசிபிக் கடல்பரப்பு வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது, 7 முதல் 24 மாதங்கள் வரை அதிகமாக்கும் நிகழ்வு தான் இந்த ‘எல் நினோ’. இந்த எல் நினோ எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சி ஏற்படுவதோ நிர்ணயமாகும்.
ஏப்ரல் 2024 வரை எல் நினோவின் தாக்கம் இருக்கும் என ஏற்கெனவே வானிலை ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். இந்நிலையில் தற்போது எல் நினோ படிப்படியாக வலுவிழந்து வருவதாகவும் அதேவேளையில் அது தனது இறுதித் தாக்கத்தை முழு வீச்சில் காட்டிக் கொண்டிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும்.. இதன் விளைவாக கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமுமே சர்வதேச வெப்ப சராசரி புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 2024-ல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட உயர்ந்து 1.58 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
கடந்த 2015 / 2016 காலகட்டத்தில் இதேபோல் ஒவ்வொரு மாதமும் அசாதரணமான வெப்பநிலை பதிவாகியது.
கடந்த 12 மாத வெப்பநிலை சராசரி 1.6 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகியுள்ளது. இது 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் மிகாமல் தடுக்க வேண்டும் என்ற இலக்கை இது மிஞ்சிவிட்டது.