ஏரியூர் பகுதியில் 20 நாட்களாக அட்டகாசம் செய்து வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்


ஏரியூர், ஏப்.8-
ஏரியூர் பகுதியில் கடந்த 20 நாட்களாக அட்டகாசம் செய்து வந்த, காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே நெருப்பூர், ஏமனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் கடந்த 20 நாட்களாக ஆண் யானை ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. பகல் நேரத்தில் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் இந்த யானை இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
மேலும் பொதுமக்கள், கால்நடைகளை தாக்கி வந்த இந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வந்தது. இந்த காட்டு யானை தாக்கியதில் 3 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி படுகாயம் அடைந்தது. இந்த யானையை பட்டாசுகள் வெடித்தும், சத்தம் எழுப்பியும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் இந்த யானை நெருப்பூர் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தும் பயிர்களை தின்றும் ெதாடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த யானையை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நெருப்பூர் பகுதியில் சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்து வந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று காலை மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர் அந்த யானையை கிரேன் எந்திரம் மூலம் லாரியில் ஏற்றி அடர்த்தியான வனப்பகுதியில் விட வனத்துறையினர் கொண்டு சென்றனர். கடந்த 20 நாட்களாக அட்டகாசம் செய்து வந்த யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.