ஏற்றத்தில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1700+ புள்ளிகள் உயர்வு

மும்பை, ஜூன் 5- மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தை மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. இன்று (புதன்கிழமை) காலை சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி என இரண்டிலும் புள்ளிகள் உயர்ந்துள்ளன. தேர்தல் முடிவுகள் நேற்று (ஜூன் 4) வெளியான போது இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் வீழ்ச்சியை எதிர்கொண்டது. நேற்றைய தினம் சுமார் 6,000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது. நிஃப்டி 50-ம் சுமார் 1,400 புள்ளிகளுக்கு கீழ் சரிந்திருந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை சீரான ஏற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில் சென்செக்ஸ் சுமார் 1,700+ புள்ளிகளுக்கு மேல் சென்றுள்ளது. தற்போது 73,842 புள்ளிகளுடன் சென்செக்ஸ் உள்ளது. அதே போல நிஃப்டி 50-ம் சுமார் 456+ புள்ளிகளை பெற்றுள்ளது. மொத்தமாக 22,340 புள்ளிகளை நிஃப்டி 50 தற்போது கொண்டுள்ளது.
முன்னதாக, தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில் திங்கட்கிழமை அன்று பங்குச் சந்தை வர்த்தகம் உச்சத்தை எட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில் தற்போது சீரான ஏற்றம் கண்டுள்ளது.