ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் சர்ச்சை: ராம் கோபால் வர்மாவுக்குசுக்வீந்தர் சிங் மறுப்பு

மும்பை, ஏப். 22- டேனி பாய்ல் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான படம், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக 2 ஆஸ்கர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார், ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘ஜெய்ஹோ’ பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்று கூறி இருந்தார். பாடகர் சுக்விந்தர் சிங் தான் அந்தப் பாடலை கம்போஸ் செய்தார் என்றும் சுபாஷ் கய் இயக்கிய ‘யுவராஜ்’ படத்துக்காக கம்போஸ் செய்யப்பட்டது என்றும் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து சுக்விந்தர் சிங் கூறியிருப்பதாவது: அந்தப் பாடலை கம்போஸ் செய்தது ஏ.ஆர்.ரஹ்மான் தான். குல்சார் பாடலை எழுதியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வார்த்தைகள் பிடித்திருந்தன. ஜூஹுவில் உள்ள எனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் தான் இசை அமைத்தார். அதை இயக்குநர் சுபாஷ் கய்-யிடம் போட்டுக்காட்டினார். அதை அவர் விரும்பினாலும் கதைக்குப் பொருத்தமாக இல்லை என்று மாற்றங்களைச் செய்ய சொன்னார். பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் சென்றுவிட்டார். பாடல் நன்றாக இருந்ததால், அங்கிருந்த பாடலாசிரியர் குல்சாரிடம், 10-15 நிமிடம் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு அதை நான் பாடினேன். பின்னர், அதை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பினேன். அதை டேனி பாய்லுக்கு அனுப்பினார், ரஹ்மான். அவர் அதை தேர்வு செய்தார். சுபாஷ் கய்-யின் ‘யுவராஜ்’ படத்துக்கு வேறு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கினார். இதுதான் நடந்தது. ராம் கோபால் வர்மாவுக்குத் தவறான தகவல் கிடைத்திருக்கும். இவ்வாறு சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.