ஐகோர்ட்டுகளின் பெயரை மாற்றும் திட்டம் இல்லை- மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: ஆக. 4:
நாட்டின் பல நகரங்களின் பெயர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு உள்ளன. எனவே அந்த பகுதிகளில் இயங்கி வரும் ஐகோர்ட்டுகளின் பெயரையும் புதிய பெயரில் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்தவகையில் பம்பாய் (பாம்பே), கல்கத்தா,
மெட்ராஸ் என்ற பெயர்களில் இயங்கி வரும் ஐகோர்ட்டுகளை அந்தந்த நகரங்களின் தற்போதைய பெயரான மும்பை, கொல்கத்தா, சென்னை ஐகோர்ட்டுகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
எனவே இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ‘ஐகோர்ட்டுகள் (பெயர் மாற்றம்) மசோதா-2016’ என்ற பெயரில் மசோதா கொண்டு வரப்பட்டது.
இதில் வேறு சில ஐகோர்ட்டுகளின் பெயரும் மாற்றும் வகையில் விதிகள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக ஒரிசா என்பது ஒடிசாவாகவும், கவுகாத்தி என்பது குவகாத்தியாகவும் திருத்துவதற்கு வழிமுறைகள் சேர்க்கப்பட்டன.
ஆனால் இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மாறுபட்ட கருத்துகள் வெளியாகின. குறிப்பாக பெயரை மாற்றுவதற்கு சில ஐகோர்ட்டுகள் விரும்பவில்லை. குறிப்பாக தமிழ்நாடு ஐகோர்ட்டு என பெயர் மாற்றுமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்தது. இதைப்போல கல்கத்தா ஐகோர்ட்டை கொல்கத்தா ஐகோர்ட்டு என மாற்றுவதற்கு அந்த மாநில அரசும், ஐகோர்ட்டும் எதிர்ப்பு தெரிவித்தன