ஐசிசி டி 20 பயிற்சி போட்டிக்கு வீரர்கள் இல்லாமல் ஆஸி. தவிப்பு

மெல்பர்ன்: மே 28
ஐசிசி டி 20 கிரிக்கெட் போட்டி வரும்ஜூன் 2-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது.இந்த தொடருக்காக ஆஸ்திரேலிய அணி இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி நமீபியாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுடன் ஆஸ்திரேலிய அணி மோதுகிறது. இந்நிலையில் இந்த இரு ஆட்டங்களிலும் விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய அணியில் 8 வீரர்கள் மட்டுமே தற்போது உள்ளனர்.
இதற்கு காரணம் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த சில வீரர்கள் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்றதுதான். ஐபிஎல் இறுதிப்
போட்டி நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் அதில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சில நாட்கள் ஓய்வுக்கு பின்னரே டி 20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் ஆஸ்திரேலிய அணி தனது இரு பயிற்சி ஆட்டங்களிலும் பீல்டிங்கிற்கு உதவி பயிற்சியாளர்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்ற பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இன்னும் ஆஸ்திரேலிய அணியுடன் இணையவில்லை. இதுதவிர பெங்களூரு அணிக்காக விளையாடிய கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் உலகக் கோப்பை அணியுடன் இந்த வாரஇறுதியில்தான் இணைய உள்ளனர். லக்னோ அணிக்காக விளையாடிய மார்கஸ் ஸ்டாயினிஸ், நமீபியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்துக்கு பின்னரே ஆஸ்திரேலிய அணியுடன் இணைகிறார். மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ள மேட் ஷார்ட், ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆகியோர் ஜூன் 5-ம் தேதியே டிரினிடாட் வருகைதர உள்ளனர்.
வீரர்களுக்கு போதுமான ஓய்வு மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் வகையில் இந்த ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது. ஐசிசி விதிகளின்படி, பயிற்சி ஆட்டங்களில் களமிறங்கும் வீரர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
தற்போது ஆஸ்திரேலிய அணியில் உள்ள உதவி பயிற்சியாளர்களான ஆண்ட்ரூ மெக்டொனால்ட், பிராட் ஹாட்ஜ், ஜார்ஜ் பெய்லி ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர்கள் ஆவர். மேலும் ஆண்ட்ரே போரோவெக் முதல்தர கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக பணியாற்றியவர். இதனால் பயிற்சி ஆட்டத்தில் பீல்டிங்கில் இவர்களை ஆஸ்திரேலிய அணி பயன்டுத்தக்கூடும். இது ஒருபுறம் இருக்க தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக முதல் பயிற்சி ஆட்டத்தில் தான், விளையாடுவது உறுதியில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.