ஐசியு வார்டுக்குள் ஜீப்பை ஓட்டி சென்று குற்றவாளியை கைது செய்த போலீசார்

ரிஷிகேஷ், மே 24: மருத்துவமனையின் ஐசியு பிரிவில் ஜீப்பில் நுழைந்த போலீசார், பாலியல் துன்புறுத்தல் குற்றவாளியை கைது செய்த சம்பவம் உத்தரகாண்டில் (எய்ம்ஸ் ரிஷிகேஷ்) நடந்தது.
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நோயாளிகள் வார்டில் படுத்திருந்த போதும், போலிஸ் ஜீப் நோயாளிகள் இருந்த‌ அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்ததை காணொளியில் காண முடிகிறது.
ஆதாரங்களின்படி, பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது. பாலியல் தொல்லைக்கு பிறகு மருத்துவமனையில் சண்டை மூண்டது. புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். குற்றவாளியை பிடிக்க போலீசார் ஜீப்புடன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்துள்ளனர். மருத்துவமனை வார்டில் நோயாளிகள் இடையே போலீஸ் கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் மே 19-ம் தேதி மாலை அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் அறுவை சிகிச்சை பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் டாக்டரை நர்சிங் அதிகாரி சதீஷ்குமார் தொந்தரவு செய்தாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எய்ம்ஸ் மருத்துவர்களும் டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்சிங் அதிகாரி சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுத்தனர். குற்றவாளியை கைது செய்ய போலீசார் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். நிலைமையைப் பார்த்த போலீசார் அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் படுத்திருந்த நோயாளிகளுக்கு நடுவே ஜீப்பை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போது பாதுகாப்புப் பணியாளர்கள் நோயாளிகளின் ஸ்ட்ரெச்சர்களை நகர்த்தி ஜீப்பிற்கு வழி அமைத்து கொடுத்தன‌ர். வார்டிற்குள் போலீஸ் ஜீப் வந்ததை பார்த்த அங்கிருந்த‌ நோயாளிகள் ஆச்சரியமடைந்தனர்.