ஐஜத தலைவராக நிதிஷ் குமார் பொறுப்பேற்பு

பாட்னா, டிச.30- பிஹாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்து வந்தவர் லாலன் சிங். இந்நிலையில்,
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அவர் தனது ராஜினாமாவை அளித்தார். வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக லாலன் சிங் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதிஷ் குமார் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல், பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், கட்சியின் தலைமைப் பொறுப்பை நிதிஷ் குமார் ஏற்றுள்ளார். கடந்த 2003-ம் ஆண்டில் நிதிஷ் குமார், ஜார்ஜ் பெர்னாண்டஸின் சமதா கட்சி, மறைந்த பிஹார் மாநில மூத்த அரசியல்வாதியான சரத் யாதவின் ஜனதாதளக் கட்சி, லோக் சக்தி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஐக்கியஜனதாதளம் கட்சி உருவாக்கப்பட்டது.
இதையடுத்து 2003 முதல் 2016 வரை ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக சரத் யாதவ் இருந்தார்.
அதன்பிறகு நிதிஷ் குமார் அந்த பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு 2021-ல் லாலன் சிங் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் செயல்பட்டு வந்தார். கட்சி பொறுப்புகள் எதுவும் வகிக்காத நிலையில் பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.