ஐபிஎல் போட்டிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர்

பெங்களூரு, மார்ச் 21:
ஐபிஎல் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக போட்டிகள் பெங்களூரிலிருந்து மாற்றப்படலாம் என கூறப்பட்ட நிலையில், பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) போட்டிகளின் போது மைதானத்திற்கு 75,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
பிடபள்யூஎஸ்எஸ்பி இன் அறிக்கையின்படி, கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) வாரியத் தலைவர், குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர் டாக்டர் ராம்பிரசாத் மனோகரை புதன்கிழமை சந்தித்து,
அனைத்து போட்டி நாட்களிலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குமாறு கோரினர்.
மைதானத்தில் காவிரி நீர், அல்லது போர்வெல் தண்ணீரை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் செய்து போட்டிகளை தொடர அனுமதிக்கலாம் என்று மனோகர் கூறினார்.
அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் கேட்டதையும், அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க விரும்புவதையும் கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்று டாக்டர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.
கப்பன் பூங்காவில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து (STP) தண்ணீர் சப்ளை செய்யப்படும்.
32,000 பார்வையாளர்கள் பங்கேற்கும் திறன் கொண்ட சின்னசாமி ஸ்டேடியம், மார்ச் 25 அன்று நகரில் முதல் ஐபிஎல் போட்டியை நடத்த உள்ளது. அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸை அணியை எதிர்கொள்கிறது. அடுத்தடுத்த போட்டிகள் மார்ச் 29 மற்றும் ஏப்ரல் 2 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.