ஐபிஎல் : விருதுகளை அள்ளி சென்ற வீரர்கள்

அகமதாபாத், மே. 30
கடந்த 2 மாதங்களாக கோலாகலமாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அறிமுக அணியான குஜராத் தங்கள் முதல் சீசனிலே சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. நேற்று போட்டி முடிந்த பிறகு இந்த தொடர் முழுவுதும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. 15-வது ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜாஸ் பட்லர் தட்டி சென்றார். இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக அவர் 863 ரன்கள் குவித்துள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிற தொப்பியை ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் பெற்றார். 17 போட்டிகளில் அவர் 27 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த தொடரின் சிறந்த மதிப்புமிக்க வீரர் விருதும் பட்லருக்கு வழங்கப்பட்டது. கொல்கத்தா அணிக்கு எதிராக லக்னோ வீரர் ஏவின் லீவிஸ் பிடித்த கேட்ச் சிறந்த கேட்ச் ஆக அங்கீகரிக்கப்பட்டது. போட்டியில் அறத்துடன் விளையாடிய அணிக்கான விருதை ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் பகிர்ந்து கொண்டன.
இந்த சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருது ஐதராபாத் வேகம் உம்ரான் மாலிக்கிற்கு வழங்கப்பட்டது.