ஐபிஎல் 2023 தொடர் – அடுத்த மாதம் கொச்சியில் மினி ஏலம் நடைபெறுகிறது

மும்பை, நவ. 10- கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற தொடர்களில் ஐ.பி.எல்லும் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு குஜராத், லக்னோ ஆகிய 2 அணிகள் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகின்றன. அடுத்தாண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு மினி ஏலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஐ.பி.எல். 2023 தொடருக்கான மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிசம்பர் 23-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரில் விளையாடும் 10 அணிகளும் நவம்பர் 15-ம் தேதிக்குள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை முடிவுசெய்து அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.