ஐ.பெரியசாமி வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிப். 26: திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணைகள் இப்போது தீவிரமடைய ஆரம்பித்துள்ளன. நீதிமன்றம் இந்த விசாரணையை வேகப்படுத்தி உள்ளன.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் முதலில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
நீதிமன்றம்: இருப்பினும், இந்த வழக்குகளின் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய சூமோட்டோ எனப்படும் தாமாகா முன்வந்து விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்துக் கொண்டுள்ளார். இருப்பினும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சூமோட்டோ வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதைச் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவு செய்வார் என உத்தரவிட்டார். அதன் பிறகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து இந்த சூமோட்டோ வழக்குகளை விசாரித்து வந்தார்.
இன்று தீர்ப்பு: இந்தச் சூழலில் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கில் விசாரணை முடிவடைந்து முடிந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளித்தார். திமுகவை பொறுத்தவரை ஏற்கனவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரும் அமைச்சர் பதவியை இழந்தார். இந்தச் சூழலில் ஐ பெரியசாமி வழக்கிலும் தீர்ப்பு வந்துள்ளது. கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தவர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி. அப்போது கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, கடந்த 2012-ம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.