ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது கோடிகளை குவித்த இடைத்தரகர்

புதுடில்லி, ஜன. 12- நாட்டை விட்டு தப்பியோடிய ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஆயுத இடை தரகராக இருந்தவர் சஞ்சய் பண்டாரி. இவர் காங்., தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ராவின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. இவர் ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த ராணுவ விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான, ‘தாலெஸ்’ மீது சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் கூறப்பட்டிருந்ததாவது: இந்திய விமானப்படைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ‘மிராஜ் – 2000’ ரக போர் விமானங்களை வாங்கும்ஒப்பந்தத்திற்காக ‘தாலெஸ்’ நிறுவனத்தில் இருந்து 167 கோடி ரூபாய் கமிஷன் பெற அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் 90 கோடி ரூபாய் பணத்தை அந்நிறுவனம் பாக்கி வைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இவை தவிர பல்வேறு ஆயுத மற்றும் விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 328 கோடி ரூபாய் அளவுக்கு இவர் லஞ்சம் பெற்றுள்ளது சமீபத்தில் கிடைத்த ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த 2010 – 12 காலகட்டத்தில், ‘தாலெஸ்’ நிறுவன வங்கி கணக்கில் இருந்து பண்டாரியின் வங்கி கணக்குக்கு 3.47 கோடி ரூபாய் மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடான பிரிட்டன் சென்ற சஞ்சய் பண்டாரி, அந்நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார்.