ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

பென்னாகரம், ஜூலை.21-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 103 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 10 ஆயிரத்து 853 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை தமிழகத்தில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.