ஒகேனக்கல் மலைப் பாதையில்பஸ் கவிழ்ந்து 35 பேர் காயம்

தருமபுரி: டிச.9-தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்ட சுகாதார துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குடும்பத்தினர் சுற்றுலா பேருந்து ஒன்றில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர்.இன்று (டிச., 9) காலை ஒகேனக்கல் மலைப்பாதையில் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து,
சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், பலத்த காயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.மலைச்சாலையின் இடது ஓர சரிவில் பெரும் பள்ளம் உள்ளது. நல்வாய்ப்பாக பேருந்து மலைச்சாலையின் பக்கவாட்டில் மோதி சாலையில் கவிழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ஒகேனக்கல் போலீஸார் விசாரிக்கின்றனர்.