ஒடிசாவில் ஆட்டோ, பைக் மீது அதிவேகமாக மோதிய ஸ்கார்பியோ கார் : 7 பேர் உயிரிழப்பு

புபனேஷ்வர் : ஜன.27-
ஒடிசாவின் கோரபுட் மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற ஸ்கார்பியோ கார் முன்னே சென்ற ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.போரிகும்மா காவல்துறை எல்லைக்குட்பட்ட பிஜப்பூர் சதுக்கம் அருகே, பிற்பகல் 2.30 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.ஒடிசா- சத்தீஸ்கர் மாநில தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கார்பியோ கார் அதிவேகமாக வந்து கொண்டு இருந்த நிலையில், முன்னே சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதியது.பின்னர் முன்னே சென்ற ஆட்டோ மற்றும் எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீதும் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில்,
8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் அதிகளவில் பரவி வருகிறது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நவீன் பட்நாயக், தலா 3 லட்ச ரூபாய் இழப்பீடும் அறிவித்துள்ளார்.