ஒடிசாவில் கனமழை; 4 பேர் பலி

கட்டாக், செப். 15- ஒடிசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒடிசா கடலோரம் கடந்து சென்றது. இதில், கடந்த 2 நாட்களில் சராசரியாக 155 மி.மீ. மழை பெய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சில பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையாளர் பிரதீப் ஜே ஜெனா தெரிவித்து உள்ளார்.
ஒடிசாவின் புவனேஸ்வர், கட்டாக், பத்ரக் மற்றும் வேறு சில நகர பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.