ஒடிசா ரெயில் விபத்து – அடையாளம் காண முடியாத நிலையில் 29 சடலங்கள்

பாலசோர், ஆக. 2- ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 295 பேர் பலியாகினர்.
1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் அருண் குமார் மகந்தோ, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய 3 பேரை கடந்த 7-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில், ஒடிசாவின்
பாலசோரில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் இன்னும் 29 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை, புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டெய்னா்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சடலங்களின் மரபணு மாதிரிகள் டெல்லியில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் முடிவுகள் வெளிவரும் என்றும் அதன் அடிப்படையில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படும் என்று எய்ம்ஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் உரிமை கோராமல் மீதமிருக்கும் சடலங்களை தகனம் செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.