ஒடிசா: 21 மந்திரிகள் பதவியேற்பு

புவனேஸ்வர், ஜூன்.5- ஒடிசாவில் 5 பெண்கள் உள்பட மொத்தம் 21 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
2024-இல் வரவுள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலுக்காகக் கட்சியைப் பலப்படுத்த முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை ராஜிநாமா செய்தது. இதைத் தொடர்ந்து, இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் என இரண்டும் கலந்து உள்ளன. இதையும் படிக்க | ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது
புவனேஸ்வரில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மொத்தம் பதவியேற்றுக்கொண்ட 21 அமைச்சர்களில் 13 பேர் கேபினட் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். 5 பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டதில், 3 பேர் கேபினட் அமைச்சர்கள். கடந்த முறை கேபினட் அந்தஸ்தில் 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி கடந்த மே 29-ம் தேதியுடன், 3 ஆண்டுகால ஆட்சியைக் கடந்து 4-ம் ஆண்டு ஆட்சியில் அடியெடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.