
சென்னை: நவம்பர். 12 -சென்னை குடிநீர் வாரியத்தில் செயலாக்கம் மற்றும் பராமரிப்புப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆயிரத்து 850 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் கோரி, சென்னை குடிநீர் வாரிய தொழிலாளர் சங்கம் (சிஐடியு) வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, தொழிலாளர் உதவி ஆணையர் க.பா.சாந்தி முன்னிலையில் சென்னை குடிநீர் வாரியஅதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் க.பீம்ராவ், பொதுச் செயலாளர் எம்.பழனி, துணைத் தலைவர் சி.சத்யநாதன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக சங்கத் தலைவர்பீம்ராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சென்னை குடிநீர்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முதல்முறையாக, ஒப்பந்ததாரர்கள் மூலமாக ரூ.3 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.