ஒரு காமெடியன் திருப்பி அடிப்பானா என யாரும் நினைக்கவில்லை

உக்ரைன், ஜூன் 4- உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100வது நாளை எட்டியது. இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ‘ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் மடிந்துவிடும் என பலர் நினைத்தனர். உலக தலைவர்கள் என்னை தப்பி ஓட அறிவுறுத்தினர். ஆனால் மக்களிடம் நகைச்சுவை நடிகனாக அறிமுகமான நான், இன்று உக்ரைன் அதிபராக பிரமாண்ட ரஷிய படைகளை எதிர்த்து அடிப்பேன் என யாரும் எதிர்பார்க்கவில்லை’ என கூறினார். உக்ரைன் மீது ரஷியா நடத்திய போரால் உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ராணுவ கட்டமைப்புகள் சின்னாபின்னமாகி உள்ளன. உக்ரைனில் ரஷியா ஏற்படுத்தி உள்ள சேதங்களை அந்நாட்டின் மந்திரிசபை மதிப்பிட்டுள்ளது. 600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.45 லட்சம் கோடி) மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என உக்ரைன் மந்திரிசபை தெரிவித்துள்ளது. ரஷிய ராணுவத்தின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலந்தில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 3 மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதவிர ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.