ஒரு கிலோ தக்காளி ரூ.600.. எல்லையை மூடி பாகிஸ்தானை கதறவிடும் ஆப்கான்

இஸ்லாமாபாத்: அக். 24-
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து உணவு பொருட்கள் பாகிஸ்தானுக்கு செல்லாததால் விலைகள் கடுமையாக உயர தொடங்கி உள்ளது. குறிப்பாக தக்காளி விலை 400 சதவீதம் வரை அதிகரித்து ஒரு கிலோ பாகிஸ்தான் கரன்சியில் ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே கடும் மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகள் கடந்த அக்டோபர் 11ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. தற்போது எல்லைகள் மூடி 14 நாட்கள் ஆகிறது. இதனால் இருநாடுகள் இடையேயான உணவு பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தான் பெரிய அளவில் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது.
பாகிஸ்தானில் தக்காளி, ஆப்பிள், திராட்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி பாகிஸ்தான் வர்த்தக அமைச்சகம் பதிலளிக்க மறுத்து வருகிறது. இதற்கிடையே தான் ஆப்கானிஸ்தான் எல்லை மூடல் காரணமாக பாகிஸ்தானில் தக்காளி விலை 400 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி பாகிஸ்தானின் கரன்சியில் 600க்கு விற்பனையாகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள கரன்சியும் நம் நாட்டை போல் ரூபாய் என்று தான் அழைக்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு குறைந்தாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.281.400 ஆக உள்ளது. உள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி 2.13 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படி பார்த்தால் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.599.34 ஆக உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அதிகளவில் பாகிஸ்தானுக்கு தக்காளி செல்லும். தற்போது தக்காளி வரத்து சரிந்துள்ளதால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதியும் சரிந்துள்ளதால் ஆப்பிள் விலையும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் கான் ஜான் அலோகோசாய் கூறியதாவது: ‛‛ஒவ்வொரு நாளும் இருநாடுகள் இடையேயான எல்லை வழியாக சுமார் 1 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடக்கும். தற்போது அது இழப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக பழங்கள், காய்கறிகள், மருந்து, கோதுமை, அரிசி, சர்க்கரை, இறைச்சி, பால்பொருட்கள் அதிகமாக வர்த்தகம் செய்யப்படும். தற்போது இந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் 500 கன்டெய்னர்களில் காய்கறிகள், பழங்கள் செல்லும். தற்போது கன்டெய்னர்கள் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.