ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை 78 முறை உயர்வு

டெல்லி: ஜூலை. 27 -இந்தியாவில் 2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை எம்பியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சாதா பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் பதில் அளித்துள்ளார்.
அவர் அளித்த பதிலில்,’டெல்லியில் 2021-22ம் ஆண்டில் 20.07.2022ம் தேதி வரை பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 7 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 10 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 280 நாட்களும், டீசல் விலை 279 நாட்களும் மாற்றம் செய்யப்படவில்லை” என கூறப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசுக்கு பெட்ரோல், டீசல் மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய அரசு, 2016 முதல் 2022 காலக்கட்டத்தில் கலால்வரி மூலமாக ரூ.16 லட்சம் கோடி வருவாயாக கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்த பதிலை ஆத்ஆம்மி எம்பி ராகவ் சாதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ராகவ் சாதா எம்பி, ‛‛கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மத்திய அரசு பெட்ரோல் விலையை 78 முறையும், டீசல் விலையை 76 முறையும் உயர்த்தி உள்ளது. இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து ஒன்றிய அரசு கொள்ளையடிப்பது தெளிவாக தெரிகிறது,’ எனக் கூறியுள்ளார்.