ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், ஜன.18-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கோஷன் நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மர்ம கும்பல் துப்பாக்கியுடன் நுழைந்தது. பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்த அனைவரையும் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனிடையே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அடுத்த சில நிமிடங்களில் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டுக்கு வெளியிலும், உள்ளேயும் பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். பிறந்து 6 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை மற்றும் அதன் 17 வயது தாய் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியானது தெரியவந்தது. சுட்டுக்கொல்லப்பட்ட இந்த குடும்பம் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், அதுதொடர்பான தொழில் போட்டியில் எதிர்தரப்பு கும்பல் அவர்களை கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.