ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம்

புதுடெல்லி, மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதா செப்டம்பர் 18ம் தேதி தொடங்க உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நாளை அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
டெல்லியில் உள்ள காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நாளை இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை நடக்கிறது. இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.,க்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.