ஒரே நாடு, ஒரே தேர்தல்சிறப்பு குழுவின் முதல் கூட்டம்

புதுடெல்லி: செப். 23: 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் 8 பேர் அடங்கிய குழுவை நியமித்தார். இதில் மத்திய மந்திரி அமித் அஷா, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே.சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி ஆகியோர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அறிவித்திருந்தார். பாராளுமன்ற தேர்தல், மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நாட்டின் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் என இந்தியா கூட்டணி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.