ஒரே நாடு ஒரே தேர்தல்: சட்டக் குழு பரிசீலனை

புதுடெல்லி: ஜூலை. 23 – ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்டக் குழு பரிசீலிபத்தாக சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் தடைபடுகிறது. செலவினமும் அதிகமாகிறது. ஆகையால் நாடாளுமன்ற தேர்தலையும் சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒருசேர நடத்துவது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்கிறது.
2014 முதல் 2022 வரை 50 சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்துள்ளன. மக்களவை தேர்தல் செலவுகளை மத்திய அரசும், சட்டப்பேரவைத் தேர்தல் செலவுகளை மாநில அரசுகளும் மேற்கொள்கின்றன. அதேவேளையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலை ஒரு சேர நடத்தினால் செலவுகளை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் 50:50 என்ற வகையில் பிரித்துக் கொள்ளலாம்.
ஆகையால் நாடாளுமன்றக் குழு ஒன்று இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்கிறது. இது தொடர்பாக அந்தக் குழு சில பரிந்துரைகளையும் அளித்திருக்கிறது. சட்ட ஆணையம் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.
அதேபோல் மாநிலங்களில் உச்ச நீதிமன்ற கிளை அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சட்ட ஆணையம் மூன்று முறை இது தொடர்பான பரிந்துரைகளை வழங்கிவிட்டது. டெல்லியில் ஒரு அரசியல் சாசன நீதிமன்றமும், நாட்டில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் மத்திய நீதிமன்றங்கள் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.