ஒரே நாடு ஒரே தேர்தல் – ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

புதுடெல்லி: ஜன. 20 ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான ஆலோசனையின் ஒரு பகுதியாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஒருவரையும் முன்னாள் தலைமை நீதிபதிகள் இருவரையும் ராம்நாத் கோவிந்த் இந்த வாரம் சந்தித்தார்.நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனைகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை ராம்நாத் கோவிந்த் கடந்தபுதன்கிழமை சந்தித்தார். இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்தார். இதுபோன்ற சந்திப்புகள் தொடரும் என கூறப்படுகிறது.