ஒரே நாளில் 358 பேருக்கு கொரோனா

டெல்லி: டிச.21-
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று புதன்கிழமை) மட்டும் 358 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக அதிகபட்சமாக கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் அதிகம் உள்ள மாநிலங்கள்: கேரளா -2341 கர்நாடகா – 92 தமிழ்நாடு 89 மகாராஷ்டிரா 45 குஜராத் 23 புதுச்சேரி 22 கோவா 19 தெலுங்கானா 14 இந்தியாவில் இதுவரை கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,33,327. முன்னதாக டெல்லியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவருடன் இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல், டாக்டர் பாரதி பிரவீன் பவார், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் ஆகியோரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ருணாச்சலப் பிரதேச முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சருமான திரு அலோ லிபாங், உத்தரப்பிரதேச துணை முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சருமான பிரஜேஷ் பதக், உத்தராகண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர், தினேஷ் குண்டுராவ், சுகாதாரத்துறை அமைச்சர் (கர்நாடகா); அனில் விஜ், சுகாதாரத்துறை அமைச்சர் (ஹரியானா); திருமதி வீணா ஜார்ஜ், சுகாதாரத்துறை அமைச்சர் (கேரளா), திரு விஸ்வஜித் பிரதாப்சிங் ரானே, சுகாதாரத்துறை அமைச்சர் (கோவா); கேஷப் மஹந்தா, சுகாதாரத்துறை அமைச்சர் (அசாம்), திரு பன்னா குப்தா, சுகாதாரத்துறை அமைச்சர் (ஜார்கண்ட்); டாக்டர் பல்பீர் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் (பஞ்சாப்); சவுரப் பரத்வாஜ், சுகாதார அமைச்சர் (டெல்லி); டாக்டர் (கர்னல்) தானி ராம் ஷாண்டில், சுகாதாரத்துறை அமைச்சர் (இமாச்சலப் பிரதேசம்); பேராசிரியர் டாக்டர் தானாஜிராவ் சாவந்த், சுகாதாரத்துறை அமைச்சர் (மகாராஷ்டிரா); தாமோதர் ராஜநரசிம்ஹா, சுகாதாரத் துறை அமைச்சர் (தெலங்கானா); டாக்டர் சபம் ரஞ்சன், சுகாதாரத்துறை அமைச்சர் (மணிப்பூர்); நிரஞ்சன் பூஜாரி, சுகாதாரத்துறை அமைச்சர் (ஒடிசா); ரங்கசாமி, முதலமைச்சர் (புதுச்சேரி) ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும், மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பை உறுதி செய்யவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார். மத்திய அரசு தரப்பில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023 டிசம்பர் 6 அன்று 115 லிருந்து இன்று 614 ஆக கடுமையாக உயர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. 92.8% பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும், இது லேசான நோயைக் குறிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதங்களில் எந்த அதிகரிப்பும் காணப்படவில்லை, மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் பிற மருத்துவ காரணங்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.