ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: ஜன. 1: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 841 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை 8மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 841 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது, கடந்த 227 நாட்களில் அதாவது 7 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும். இதற்கு முன்பு கடந்த மே 19-ம்தேதி 865 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளானதே அதிகபட்சஅளவாக இருந்தது. அதையடுத்து, டிசம்பர் 5 வரையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து இரட்டை இலக்கத்துக்குள் வந்தது. இந்த நிலையில், புதிய திரிபு கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை தற்போது படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு, குளிர் காலமும் முக்கிய காரணமாகியுள்ளது.
நாட்டில் கரோனா தொற்றுக்கு கிசிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,309-ஆக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, பிஹார் மாநிலங்களில் தலா ஒருவர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரே நாளில் 599 பேரிடம் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 10 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதார துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.