ஒரே மேடையில் நிதிஷ், மம்தா உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள்

புதுடெல்லி: செப்டம்பர். 9 – ஹரியாணாவின் ஒரே மேடையில் நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தோன்ற உள்ளனர். செப்டம்பர் 25-ல் திட்டமிடப்படும் இக்கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சி செய்யப்படுவதாகத் தெரிகிறது.
நாட்டின் முன்னாள் துணை பிரதமராக இருந்தவர் தேவிலால். ஹரியாணாவை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரான இவரது பிறந்த தினம் செப்டம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, ஹரியாணாவின் ஹிசாரில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், எதிர்க்கட்சி தலைவர்களான ஐக்கிய ஜனதா தளம்
(ஜேடியு) நிதிஷ்குமார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாதவர்கள் என்பதால், இக்கூட்டத்தை வைத்து மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சி நடைபெறும் என எதிர்நோக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சிரோமணி அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல், சமாஜ்வாதி நிறுவனர் முலாயம்சிங் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத்பவார் ஆகியோரும் கலந்துகொள்வதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இந்திய தேசிய லோக் தளம்(ஐஎன்எல்டி) தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுடன் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நடத்திய சந்திப்பை அடுத்து இக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டமாக இது இருக்கும்.
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதை அடுத்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக கடந்த 4 நாட்களாக அவர் டெல்லிக்கு வந்து முகாமிட்டு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் பல தலைவர்கள் காங்கிரஸை தம்முடன் சேர்ப்பதை விரும்பவில்லை எனத் தெரிந்துள்ளது. எனவே, மூன்றாவது அணி அமைத்து 2024 மக்களவை தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்கும் சூழலை பொறுத்து காங்கிரஸின் ஆதரவை பெறுவது என திட்டமிடப்படுகிறது.
ஹரியாணாவில் 2 முறை முதல்வராக இருந்தவர் லோக் தளம் கட்சியின் நிறுவனரான தேவிலால். இவரது காலத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைத்து ஆட்சியும் செய்திருந்தது. கடந்த 1989 முதல் 1991 வரையில் மத்தியில் நடைபெற்ற ஆட்சியில் பிரதமராக வி.பி. சிங் மற்றும் சந்திரசேகர் இருந்தபோது, நாட்டின் ஆறாவது துணை பிரதமராக பதவி வகித்தவர் தேவி லால். இதனால் அவரது பிறந்த நாளின் பேரில், மீண்டும் காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க முயல்கிறார் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா.
இக்கூட்டத்துக்கு ஹரியானாவின் முன்னாள் முதல்வரான ஓம் பிரகாஷ் சவுதாலா, தென் மாநிலங்களின் கட்சிகளையும் அழைக்க உள்ளார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவரும் தெலங்கானாவின் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த அழைப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இக்கூட்டத்தின் மூலம் தனது குடும்பத்தினரால் பிரிந்து விட்ட ஐஎன்எல்டியை மீண்டும் உறுதிப்படுத்துவது ஓம் பிரகாஷ் சவுதாலாவின் நோக்கமாக உள்ளது.