ஒவைசி தலைமையில் உ.பி.யில் புதிய கூட்டணி

புதுடெல்லி, ஏப். 2- உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி கடந்த2 வருடங்களாக பிடிஏ (பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர்) சமூகத்தினருக்காக குரல் கொடுத்து வருகிறது. இதேவகையில், பிடிஎம் நியாய மோர்ச்சா எனும் பெயரில் புதிய கூட்டணி உ.பி.யில் தற்போது உருவாகியுள்ளது. இதன் பிடிஎம் என்பதும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களையே குறிக்கிறது. ஹைதராபாத் எம்.பி.யான அசதுத்தீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சி தலைமையில் இக்கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணியில் அப்னா தளம் (கே) கட்சித் தலைவர் பல்லவி படேல் முக்கிய உறுப்பினராக உள்ளார். கடந்த 2022 உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் இவர் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்தார். சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது சகோதரியும் அப்னா தளம் (எஸ்) கட்சியின் தலைவருமான அனுப்பிரியா படேல், பல ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இடம்பெற்று மத்திய இணை அமைச்சராக உள்ளார். பிடிஎம் நியாய மோர்ச்சாவில் உ.பி.யின் சிறிய கட்சிகளான, ராஷ்டிரிய உதய் கட்சி, பிரகதீஷில் மானவ் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இணைந்துள்ளன. ஒவைசி கூட்டணி சார்பில் உ.பி.யின் 80 தொகுதிகளிலும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் போட்டியிட உள்ளனர் இது இண்டியாகூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. காங்கிரஸும் சமாஜ்வாதியும் இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணி சார்பிலும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியிட உள்ளனர். இதனால் ஒவைசியின் கூட்டணி, இண்டியா கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.