ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்


பெங்களூரு, ஏப்.28-
கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஓசூரில் இருந்து செல்லும் கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. அதே போல் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் 27-ந்தேதி (நேற்று) இரவு 9 மணி முதல் 11-ந் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி கர்நாடகத்தில் முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது.
மருத்துவமனைகள், மருந்தகங்கள் இயங்க எந்த தடையும் இல்லை. காய்கறி, பழங்கள், பால், பலசரக்கு கடைகளை காலை 6 மணிக்கு திறந்து காலை 10 மணிக்குள் மூட வேண்டும். இந்த 4 மணி நேரத்திற்குள் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளதால் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.