ஓசூரில் மாநகர காங்கிரஸ் சார்பில்பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஓசூர், ஜூலை.21-
ஓசூரில் மாநகர காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஓசூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ரெயில் நிலையம் முன்பு தொடங்கிய சைக்கிள் ஊர்வலத்திற்கு கட்சியின் மாநகர தலைவர் ஆர்.நீலகண்டன் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சாதிக் கான் முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ராம்நகர் அண்ணா சிலையருகே நிறைவடைந்தது. பின்னர் அங்கு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஓசூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் எம்.ராமச்சந்திரன், தி.க. நிர்வாகி வனவேந்தன், அனைத்து குடியிருப்போர் நலசங்க கூட்டமைப்பின் பொருளாளர் சீனிவாசலு ஆகியோர் பேசினார்கள். மேலும் இதில், விவசாய பிரிவு ஒருங்கிணைப்பாளர் சூரியகணேஷ், கெலமங்கலம் வட்டார தலைவர் அன்புநாதன், வித்யாசாகர், காஜா, பூங்கொடி, மஞ்சு, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் மாரப்பா, ஆஞ்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.