ஓசூரில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஏப். 6: ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட அரசு கரூவலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடி உள்ளது. இப்பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த வாகனத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்தில் இருந்த 69 பெட்டியில் தங்க நகைகள் இருந்தன. இவற்றில், 45 பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளுக்கு ஆவணங்கள் இருந்தது. ஆனால், எஞ்சிய 24 பெட்டிகளுக்கு ஆவணங்கள் இல்லை. மேலும் வாகன ஓட்டுநர் அளித்த முன்னுக்குப் பின் முரணான பதிலால் நகைகள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நடந்த விசாரணையில் அந்த நகைகள் பிரபல டைட்டன் தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட நகைப் பெட்டிகள் ஓசூர் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உதவி தேர்தல் அலுவலர் பிரியங்கா முன்னிலையில் கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.