ஓசூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஓசூர்,அக்.18-
ஓசூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் வளாகத்தின் அருகே ஜூஜூவாடியில் போக்குவரத்து சோதனைச்சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை தணிக்கை செய்து தற்காலிக பர்மிட் வழங்கும் பணியையும், அதேபோல கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்களை தணிக்கை செய்து தற்காலிக பர்மிட் வழங்கும் பணியையும் அலுவலர்கள் மேற்கொள்கிறார்கள். தினமும் இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த நிலையில் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு பர்மிட் வழங்குவதற்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சோதனைச்சாவடியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை நேற்று அதிகாலை வரை நீடித்தது. அப்போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 120-ஐ மேசைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சோதனைச்சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சுப்புரத்தினம், உதவியாளர் ராமலிங்கம் ஆகிய 2 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள்.