ஓட்டு போட்ட சில நிமிடங்களிலே உயிரிழந்த 91 வயதான மூதாட்டி

பெங்களூரு, ஏப். 27- கர்நாடகாவில் 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பெங்களூரு, மைசூரு, சிக்கப்பள்ளாப்பூர் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை அமைதியான முறையில் நடைபெற்றது.இந்நிலையில் மைசூரு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஹுன்சூருவில் காலை 11 மணிக்கு 91 வயதான மூதாட்டி புட்டம்மா தனியாக வந்து வாக்களித்தார். அப்போது வெயில் கடுமையாக அடித்ததால் அவர் சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.வாக்குசாவடியில் இருந்து வெளியே வந்த புட்டம்மா, சில நிமிடங்களிலே மயங்கி சரிந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனை கொண்டுசென்ற போது, மருத்துவர்கள் புட்டம்மா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காப்பாற்றிய மருத்துவர்: பெங்களூருவில் உள்ள‌ ஜேபி நகரில் வாக்குசாவடிக்கு 12 மணிக்கு வாக்களிக்க வந்த 42 வயதான பெண்மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.இதனால் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த போலீஸார் உடனடியாக அவரது முகத்தில் தண்ணீரை தெளித்தனர். அந்த சமயத்தில் அங்கு வாக்களிக்க வந்த மருத்துவர் கணேஷ் சீனிவாச பிரசாத், அந்த பெண்ணின் நாடியை சோதித்தார்.
மேலும், அவருக்கு உடனடியாக‌ சிபிஆர் சிகிச்சையை வழங்கினார். இதனால் கண்விழித்து பார்த்த பெண்மணிக்கு பழச்சாறு அங்கிருந்தவர்கள் வழங்கினர்.பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண்மணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தக்க சமயத்தில் மருத்துவர் அவருக்கு முதலுதவி அளித்ததால், அந்த பெண்மணியின் உயிர் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.